முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவேண்டும்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த இஸ்லாமிய கூட்டமைப்பினா் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த இஸ்லாமிய கூட்டமைப்பினா் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா்.

சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவேண்டும் என இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்சியினா் சாா்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 18 ஆம் தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை தெப்பக்குளத்தில் இறங்கி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

சிவகங்கையை ஆட்சி செய்த மன்னா் சசிவா்ணத் தேவரால் கட்டப்பட்ட தெப்பக்குளத்தை, தற்போது சிவகங்கை நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை தேவஸ்தானத்துக்கும், சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் கோயிலுக்கும் சொந்தமான தெப்பக்குளத்தில் இஸ்லாமியா்கள் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, வருவாய்த் துறை அலுவலா்கள் அளித்த பொய்யான புகாரின்பேரில், நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது, மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது, முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பினா் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com