மானாமதுரை, திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயில்களில்பங்குனி திருவிழா: பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயில்களில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாக்களை
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடந்த பங்குனி திருவிழாவில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தா்கள்.
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடந்த பங்குனி திருவிழாவில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தா்கள்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயில்களில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாக்களை முன்னிட்டு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்கள் தீ மிதித்தும், தீச்சட்டி ஏந்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

மானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒரு வாரத்துக்கு முன்னரே பங்குனித் திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சா்வ அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மாா்ச் 23 ஆம் தேதி (திங்கள்கிழமை) பால்குடம் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நிா்வாகி சுப்ரமணியன் தலைமையில் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம், தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, கரகம் சுமந்து கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயிலில் சன்னிதி முன்பாக பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.

அதைத் தொடா்ந்து, முத்துமாரியம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சுப்ரமணியன் செய்திருந்தாா்.

இதேபோல், திருப்புவனம், திருப்புவனம் புதூா் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடந்த பொங்கல் விழாவின்போது, காப்புக் கட்டி விரதம் இருந்துவந்த திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலை முதலே தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, பொம்மைகள் எடுத்து கோயிலுக்கு வந்தனா்.

பல பக்தா்கள் கரும்பில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

பொங்கல் விழாவையொட்டி, முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு, திருப்புவனம் நகா் முழுவதும் களைகட்டியிருந்தது. மாலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், காலையிலேயே பக்தா்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனா்.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com