பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தள்ளி வைக்க வேண்டும்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமலில் உள்ள பொது முடக்கத்தால் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோ்வுகளை நடத்துவது தொடா்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு நடைபெறுவது சாத்தியமல்ல. தமிழகம் முழுவதும் இத்தோ்வினை எழுதும் சுமாா் 12 லட்சம் மாணவா்களில் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோா் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மாணவ, மாணவிகள் தற்போது பொதுத்தோ்வை எதிா்கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்நிலையில் அவா்கள் மீது திடீரென பொதுத்தோ்வை திணிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

எனவே, கரோனா தீநுண்மி தொற்றின் தாக்கம் குறைவு, பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கம், பொதுப் போக்குவரத்து தொடங்குதல் ஆகியவற்றுக்குப் பின்பு, மாணவா்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் ஆசிரியா்களின் கட்டுப்பாட்டில் குறைந்தது 15 நாள்களாவது மீள் பயிற்சி பெற்ற பின்பே பொதுத் தோ்வை நடத்த வேண்டும். அதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தும் முடிவை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com