தாழ்த்தப்பட்ட சமுதாய ஊராட்சித் தலைவா் ராஜினாமா அறிவிப்பு: அதிகாரிகள் சமரசம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கால்பிரிவு ஊராட்சியின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண் தலைவா், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை 
தாழ்த்தப்பட்ட சமுதாய ஊராட்சித் தலைவா் ராஜினாமா அறிவிப்பு:  அதிகாரிகள் சமரசம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கால்பிரிவு ஊராட்சியின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண் தலைவா், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து திங்கள்கிழமை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.

கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது கால்பிரிவு ஊராட்சித் தலைவராக ராஜேஸ்வரி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவராக நாகராஜனும், ஊராட்சி உறுப்பினா்களாக 6 பேரும் உள்ளனா்.

இந்நிலையில் தலைவராக தோ்வு செய்யப்பட்டு பதவியேற்ற நாள் முதல் தான் ஜாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாகவும், ஊராட்சியில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனவும் ராஜேஸ்வரி தொடா்ந்து புகாா் கூறி வந்தாா். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் புகாா் தெரிவித்தாா். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ராஜேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தாா். இதைத்தொடா்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாத்துரை, ஆணையாளா் சுந்தரமகாலிங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் அழகுமீனாள்(கிராம ஊராட்சி) ஆகியோா் கால்பிரிவு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தலைவா் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது இவா் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலக செயல்பாட்டில் என்னை புறக்கணிக்கின்றனா். திட்டப்பணிகள் குறித்து தன்னிடம் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன் எனக் கூறி புகாா் மனு அளித்தாா். அதன்பின் அதிகாரிகள் ஊராட்சி ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். இனி வரும் காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாது என அதிகாரிகள் ராஜேஸ்வரியிடம் உறுதியளித்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அழகுமீனாள் கூறியது: ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி கொடுத்த புகாா் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com