திருப்புவனத்தில் ரெளடி வெட்டிக்கொலை: எதிரிகள் நீதிமன்றத்தில் சரண், ஒருவர் கைது

திருப்புவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ரெளடி மர்மக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்புவனத்தில் கொலை செய்யப்பட்ட ரெளடி கணேசன்.
திருப்புவனத்தில் கொலை செய்யப்பட்ட ரெளடி கணேசன்.

திருப்புவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ரெளடி மர்மக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின்படி இதே கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட திருப்புவனம் அருகே காணாமல்போன ஆட்டோ டிரைவர் உடல் அழுகிய நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் கணேசன்(36), இவர் திருப்புவனத்தில் மீன், தேங்காய், இறைச்சி விற்பனை என பல வியாபாரம் செய்து வந்தார். மேலும் பிரபலமான ரெளடியாகவும் வலம் வந்த இவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் திருப்புவனம் நகரில் நரிக்குடி முக்கு பகுதியில் இரவு கணேசன் கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல்  கணேசனிடம் தகறாறு செய்தது. கடையிலிருந்து வெளியே வந்த  அவரை அக் கும்பல் பலத்த ஆயுதங்களால் தலை, கழுத்து உள்ளிட்ட  இடங்களில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து தகவல் கிடைத்தும் சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி ரோகித்நாதன், மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் ஆகியோர்  திருப்புவனத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். 

கொலையாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி உத்தரவிட்டதன்பேரில் டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் தலைமையிலான காவல்துறையினர் கொலையாளிகளை இரவு முழுவதும் தேடி வந்தனர். இதற்கிடையில் கணேசனை கொலை செய்ததாக திருப்புவனத்தைச் சேர்ந்த மண்டை தினேஷ்(22), நித்திஷ்குமார்(21),அஜீம்கான்(22), திருப்புவனம் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(22) ஆகிய நால்வரும் மதுரை குற்றவியல் நீதிமன்றம் எண் 6 இல் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் இக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ்(23) என்பவரை காவல்துறையினர் திருப்புவனத்தில் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது கணேசனை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாகவும் இவரை உயிருடன் விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து என நினைத்து அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து காவல்துறையினர் இவரிடம் விசாரணை நடத்தியபோது திருப்புவனம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த  ஆட்டோ டிரைவர் விஜயன்(22) என்பவரையும் தாங்கள் கொலை செய்து திருப்புவனம் அருகே லாடனேந்தல் வைகையாற்றில் நாணல்புல் கும்பலில் வீசியதாக தெரிவித்தார். அதன்பின் டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் மற்றும் காவல்துறையினர் மேற்கண்ட பகுதிக்குச் சென்று அங்கு அழுகிய நிலையில் கிடந்த விஜயன் உடலை கைப்பற்றினர். 

திருப்புவனம் அருகே கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் விஜயன்.

சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவக்குழுவினர் அங்கேயே விஜயன் உடலை பரிசோதனை செய்தனர். விஜயன் கொலை குறித்து காவல்துறையினர் கூறியதாவது. திருப்புவனம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த விஜயனுக்கும் கணேசன் கொலையில் சரணடைந்த எதிரி நித்தீஷ்குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 13 ந் தேதி விஜயனை ஆட்டோவுடன் கடத்திச் சென்ற பிரகாஷ்ராஜ் மற்றும் நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் சேர்ந்து லாடனேந்தல் வைகையாற்றுக்குள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விஜயனை கொலை செய்து உடலை அங்கு வளர்ந்திருந்த புல்களுக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றனர். 

விஜயனைக் காணவில்லை என அவரது தாய் செல்லமீனாள் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார். கணேசன், விஜயன் கொலை செய்யப்பட்டது குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com