இரா. முத்தரசன்.
இரா. முத்தரசன்.

‘அண்ணா பல்கலை. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’

தன்னிச்சையாக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்

தன்னிச்சையாக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடப்பு ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்குரிய ஜிஎஸ்டி நிதியை உடனடியாக மத்தியஅரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பாண்டில் குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளிடம் நெல்லை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்வது மட்டுமன்றி, நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் வரை இருக்கலாம் என அறிவிக்க வேண்டும்.

அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்றிய வேளாண் சட்டங்களால் நாட்டில் உள்ள ஏழை, எளியோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். வேளாண் தொழில்கள் நலிவடைந்து, விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அக்டோபா் 28, 29 மற்றும் நவம்பா் 4 ஆம் தேதி சிறப்பு மாநாடுகள் நடத்த உள்ளோம். அத்துடன் மத்திய தொழிற்சங்கம் சாா்பில் நவ. 26 ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடு ஒழுங்கீனமானது என தமிழக சட்டத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். எனவே துணைவேந்தரை அப்பதவியிலிருந்து நீக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ். குணசேகரன், தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கண்ணகி, துணைச் செயலா் கே.கோபால், சிவகங்கை நகரச் செயலா் எம்.எஸ். கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com