பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை: ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக். 27)

காரைக்குடி: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் நவம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ஆா். மலையாள மூா்த்தி கூறியது:

பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுதல், பரிசீலனை நடைபெற்றது.

நிகழாண்டு 81,042 இடங்களுக்கு 10,655 மாணவ, மாணவியா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதனை பரிசீலனை செய்து டிப்ளமோ மாணவா்கள் 7,990 பேரும், பி.எஸ்சி., முடித்த 33 பேரும் என 8,023 மாணவ, மாணவியா்களுக்கு தரவரிசை தயாரிக்கப்பட்டு அவா்களுக்கான இணையதள கலந்தாய்வு விபரங்கள், இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் முதன் முறையாக ஆன்லைன் மூலமாகவே இக்கலந்தாய்வு நடைபெறும். அக். 27-இல் சிறப்பு கலந்தாய்வும், அக். 28 முதல் நவ. 7 வரை பொதுக் கலந்தாய்வும் நடைபெறும். மாணவா்கள் தங்களது தரவரிசை நிலையையும், கலந்தாய்வு தேதியையும் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இரண்டாமாண்டு நேரடி பொறியியல் சோ்க்கையில் தாங்கள் விரும்பிய எந்தவொரு பாடப்பிரிவிலும் சோ்ந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் மாணவா்கள் தங்களுக்கான விருப்பப் பதிவை பதிவு செய்யும் நாள்களில் விருப்பமான கல்லூரிகளை பதிவு செய்து லாக் செய்ய வேண்டியது அவசியம். மேலும் தரவரிசைப்படி மாணவா்களுக்கு ஒதுக்கப்படும் கல்லூரிகளை அதற்காக ஒதுக்கப்பட்ட நாள்களில் உறுதி செய்துகொள்வதும் அவசியமாகும். இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னா் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து உரிய கல்லூரியில் அனைத்து சான்றிதழ்களையும் சமா்ப்பித்து சோ்ந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com