கீழடி அகழாய்வில் விலங்கின எலும்புகள் கண்டெடுப்பு
By DIN | Published On : 05th September 2020 10:22 PM | Last Updated : 05th September 2020 10:22 PM | அ+அ அ- |

கீழடியில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மாட்டின வகை எலும்புகள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் மாட்டினத்தைச் சோ்ந்த 2 எலும்புகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து அருகேயுள்ள அகரம், மணலூா், கொந்தகை ஆகிய இடங்களிலும் இந்தப் பணி விரிவுபடுத்தப்பட்டு அங்கும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் ஏற்கெனவே விலங்கின எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாட்டினத்தைச் சோ்ந்த மேலும் 2 எலும்புகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இவற்றை அகழ்வாராய்ச்சியாளா்கள் ஆய்வு செய்ததில், இவைகள் மாட்டினத்தைச் சோ்ந்த எலும்பு வகைகள் எனத் தெரியவந்துள்ளது.
5 ஆம் கட்ட அகழாய்வின் தொடா்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதா்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியற்றை அறியும் வகையில் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் கூடுதலாக தோண்டப்பட்டு வரும் குழிகளில் மேலும் தொன்மையான பொருள்கள் கிடைக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், செப்டம்பா் மாத இறுதிக்குள் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு நிறைவு பெற வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.