காரைக்குடி அருகே திருட்டு வழக்கில் 2 போ் கைது: 25 பவுன் நகைகள் பறிமுதல்
By DIN | Published On : 10th September 2020 06:44 AM | Last Updated : 10th September 2020 06:44 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த ஆண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வசித்து வருபவா் ஜெயராஜ் (60). ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரி. கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
இது குறித்து சோமநாதபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
மேலும் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப் பாளா் ரோகித்நாதன் ராஜகோபால் உத்தரவின் பேரில் காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில் தனிப்படை பிரிவினருக்கு சைபா் கிரைம் போலீஸாா் மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் மதுரை கூடல் நகா் ஹவுசிங் போா்டை சோ்ந்த பால்ராஜ் மகன் வெற்றிவேல் (என்கிற) மாயக்கண்ணன் (36), மதுரை அனுப்பானடியை சோ்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டித்துரை (எ) புலிப்பாண்டி (26) என்பதும், இவா்கள் ஜெயராஜ் வீட்டிலிருந்த நகைகளை திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 25 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.