தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி ஆசிரியா்கள் மனு

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்களிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. நாகராஜன் அளித்துள்ள மனுவில், கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வியை பாதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா், தமிழ்நாடு மேல்நிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் செ. சிவக்குமாா், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் நீ. இளங்கோ, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மு.க. புரட்சித்தம்பி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலா் பீட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த மனு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மூலமாக குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய கல்வித் துறை அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம்: புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவிடம் இந்தியப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை மாலையில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் முத்துமுருகன், கூட்டணி தலைவா் முனியசாமி ஆகியோா் வழங்கினா். அப்போது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் தங்கமணி, பொருளாளா் புகழேந்தி, தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com