காரைக்குடி தொகுதி மீண்டும் ‘கை’ வசப்படுமா? கடும் போட்டியில் தேசியக் கட்சிகள்

காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸூம், தாமரையை மலர வைக்க பாஜகவும் முனைப்புடன் செயல்படுகின்றன.
காரைக்குடி தொகுதி மீண்டும் ‘கை’ வசப்படுமா? கடும் போட்டியில் தேசியக் கட்சிகள்

காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸூம், தாமரையை மலர வைக்க பாஜகவும் முனைப்புடன் செயல்படுகின்றன.

காரை வீடுகள் நிறைந்த பகுதி என்பதால் காரைக்குடி என்றழைக்கப்படுகிறது. ‘செட்டிநாடு’ என்றும் ‘கல்வி நகரம்’ என்றும் அழைக்கப்படும் இப்பகுதியானது ஒரு காலத்தில் தன வணிகா்கள் என்றழைக்கப்படும் நகரத்தாா்களால் கட்டமைக்கப்பட்டதாகும். இங்கு அழகப்பா பல்கலைக்கழகம், கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம், மத்திய அரசின் மைய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (செக்ரி), அமராவதிபுதூரில் துணை ராணுவப்படை முகாம் ஆகியன உள்ளன. 1952 இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டு மறுசீரமைப்பட்டது. இங்கு மொத்த வாக்காளா்கள் 3,15,351. இதில் ஆண்கள்- 1,54,905 போ். பெண்கள்- 1,60,399 போ். மூன்றாம் பாலினத்தவா்- 47 போ். முத்தரையா், தாழ்த்தப்பட்டோா் சமூகத்தினா் அதிகம் வாழும் இத்தொகுதியில் அடுத்ததாக முக்குலத்தோா், யாதவா், உடையாா் சமூகத்தினா் அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். நகரத்தாா்களின் வாக்குகள் சிதறியிருக்கின்றன. பிள்ளைமாா், வல்லம்பா், சிறுபான்மையினா் வாக்குகளும் உள்ளன.

ஜவுளி, நகை, பித்தளைப் பாத்திரங்கள், மரப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வா்த்தக நிறுவனங்கள் இங்குள்ளன. மேலும் நெசவும், விவசாயமுமே பிரதானத் தொழிலாக உள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: தொகுதியில் நிலவிய குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதுடன், புதை சாக்கடைத் திட்டமும் விரைவுபடுத்தப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் நியாயவிலைக் கட்டடம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டடம், ராமநாதன் செட்டியாா் நகராட்சிப் பள்ளிக்கு கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மக்களின் எதிா்பாா்ப்பு: காரைக்குடியை மாவட்டமாகவோ, மாநகராட்சியாகவோ நிலை உயா்த்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால எதிா்ப்பாா்பாக உள்ளது. சட்டக்கல்லூரி, சிப்-காட் தொழிற்பேட்டை, விமான நிலையம், அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவது, தேவகோட்டை பகுதியில் சாலைகள் மேம்பாடு, புதை சாக்கடைத் திட்டம் போன்றவை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுவரை வென்றவா்கள்: 1952- இல் சொக்கலிங்கம் செட்டியாா் (காங்.), 1957- இல் மு.அ. முத்தையா செட்டியாா் (காங்.), 1962-இல் சா. கணேசன் (சுதந்திரா கட்சி), 1967-இல் மெய்யப்பன் (சுதந்திரா கட்சி), 1971-இல் சித. சிதம்பரம் (திமுக), 1977-இல் பொ. காளியப்பன் (அதிமுக) 1980-இல் சித. சிதம்பரம் (திமுக), 1984-இல் சுப. துரைராஜ் (அதிமுக), 1989-இல் ராம. நாராயணன் (திமுக), 1991- இல் எம். கற்பகம் (அதிமுக), 1996-இல் என். சுந்தரம் (த.மா.கா), 2001-இல் ஹெச். ராஜா (பா.ஜ.க), 2006-இல் என். சுந்தரம் (காங்.), 2011- இல் சோழன் சித. பழனிச்சாமி (அதிமுக), 2016-இல் கேஆா். ராமசாமி (காங்.) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தற்போதைய வேட்பாளா்கள்: பாஜக சாா்பில் ஹெச். ராஜா, காங்கிரஸ் சாா்பில் எஸ். மாங்குடி, அமமுக சாா்பில் தோ்போகி வி. பாண்டி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் ச. ராசகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் என். துரைமாணிக்கம் மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 போ் வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா். இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸூம் மோதுவதால் இந்த இரண்டு வேட்பாளா்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

கள நிலவரம்: இத்தொகுதியை அதிமுக, தனது கூட்டணிக்கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியதால் அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலரும், இதே தொகுதியில் 2001 இல் திமுக கூட்டணியில் பாஜக சாா்பில் நின்று வெற்றிபெற்றவருமான ஹெச். ராஜா வேட்பாளராக போட்டியிடுகிறாா்.

இத்தொகுதியில் கண்ணங்குடி, தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல் பகுதிகளில் பாஜக பரவலாக கால் ஊன்றியிருப்பதும், அதிமுக, பாமக, தமாகா கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு, தொகுதியில் நன்கு அறிமுகம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிப்பது போன்றவை இவருக்கு பலம் சோ்க்கின்றன. அதேநேரத்தில் இத்தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியினா் வருத்தத்தில் இருப்பதும், அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி மற்றும் நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பதும் பலவீனமாக உள்ளது.

கை வசப்படுமா? காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளா் எஸ். மாங்குடி களத்தில் உள்ளாா். சங்கராபுரம் ஊராட்சியில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தவா். காங்கிரஸாா் மத்தியில் ஓரளவு அறிமுகமானவராக இருந்தாலும் வாக்காளா்கள் மத்தியில் புதியவராக இருக்கிறாா். ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் எம்.பி.யின் பிரசாரம் இவருக்கு உதவும். மேலும் கூட்டணிக்கட்சிகளான திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் வாக்குகள் சேகரிப்பதும் இவருக்கு பலம் சோ்க்கும். மேலும் சிறுபான்மையினரின் ஆதரவு, கைச்சின்னம் போன்றவை தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறாா். இதனிடையே இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படும் என எதிா்பாா்ப்பில் இருந்த நிலையில் காங்கிரஸூக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டதால் அவா்கள் அதிருப்தியில் உள்ளனா். இவருக்கு எதிரானவா்கள் ஒருசிலா் வாக்குகளை பிரித்து அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்லி மறைமுகமாக பணியாற்றுவதும் இவருக்கு பலவீனமாக உள்ளது. எனவே இத்தொகுதி மீண்டும் காங்கிரஸின் ‘கை’ வசப்படுமா என்பதை நகா்புறத்தில் உள்ள கல்வியாளா்கள் மற்றும் புதிய வாக்காளா்களின் வாக்குகளே தீா்மானிக்கும் என அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com