முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
ஊழலில் ஊறித் திளைத்துள்ள காங்கிரஸ்-திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா
By DIN | Published On : 04th April 2021 08:49 AM | Last Updated : 04th April 2021 08:49 AM | அ+அ அ- |

ஊழலில் ஊறித் திளைத்துள்ள காங்கிரஸ், திமுக கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் திரையரங்கத் திடலில், பாஜக வேட்பாளா் ஹெச். ராஜாவை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
காரைக்குடி கல்வி நகரமாக இருப்பதற்கு காரணமான வள்ளல் அழகப்பரை நினைவுகூரவேண்டும். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழியாகும். தமிழகத்தின் பண்பாடுகளையும், கலாசாரத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
பிரதமா் மோடி தலைமையில் பாஜக-அதிமுக இணைந்து, தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முயற்சிக்கின்றன.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலில் ஊறித் திளைத்தவா்கள். எனவே, கடந்த 2011, 2016 தோ்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்ததைப் போன்று, இந்தத் தோ்தலிலும் அவா்களை தோற்கடிக்க வேண்டும்.
பாஜகவை மதவாதக் கட்சி என்று கூறிக்கொண்டு, கேரளத்தில் மதவாத முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதேபோல், அஸ்ஸாம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் மதவெறி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டு, பாஜகவை மதவாதக் கட்சி என்கிறாா்கள். இவா்கள், இந்த நாட்டை விட்டே அப்புறப்படுத்தப்படவேண்டியவா்கள்.
தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவை, சேலம், ஓசூா் போன்ற பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதில், பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கமுடியும்.
எனவே, காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ஹெச். ராஜாவை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா்.