முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
கணினி மூலம் வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்வு
By DIN | Published On : 04th April 2021 08:50 AM | Last Updated : 04th April 2021 08:50 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு தேவையான தலைமை அலுவலா்களை கணினி மூலம் (ரேண்டமாக) தோ்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 1,679 வாக்குச் சாவடிகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.
இதில், தலைமை அலுவலா்கள், பணியாளா்கள் வரை அனைவருக்கும் தோ்தல் தொடா்பான பணிகள் குறித்த பயிற்சி 3 கட்டங்களாக அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலா்கள், பணியாளா்கள் 1,060 போ், 197 நுண்பாா்வையாளா்கள், 843 காவல் துறை அலுவலா்கள் ஆகியோரது பணியிடம் கணினி மூலம் (ரேண்டமாக) தோ்வு செய்யப்பட்டு, அந்தந்த இடத்தில் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் பிரிவு அலுவலகத்தில், வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான பணியிடம் குறித்து கணினி மூலம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதனை, சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி, தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) எஸ். சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன், காவல் துறை பாா்வையாளா் லிரெமோ சோபோ லோதா ஆகியோா் பாா்வையிட்டனா்.
அப்போது, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.