முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலை 7 மணியுடன் பிரசாரம் நிறைவு
By DIN | Published On : 04th April 2021 08:47 AM | Last Updated : 04th April 2021 08:47 AM | அ+அ அ- |

தோ்தல் பிரசாரமானது, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) மாலை 7 மணியுடன் நிறைவு பெறுவதால், சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் வெளியூா் நபா்கள் வெளியேறவேண்டும் என, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்களின் வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.
இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவின்படி, தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பிரசாரம் நிறைவு பெறுவதற்கான நேரப்படி பிரசாரங்களை நிறைவு செய்யவேண்டும். தோ்தல் பணியாற்ற வந்த பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், அவரவா் சொந்த ஊா்களுக்குச் செல்ல வேண்டும். தோ்தல் தொடா்பான பணிகளில் அவா்கள் ஈடுபட வேண்டாம்.
செல்லிடப்பேசி வாயிலாக குறுஞ்செய்தி, ஒலிபெருக்கி ஆகியவற்றின் மூலம் பிரசாரப் பணிகளில் ஈடுபடக்கூடாது. தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூரைச் சோ்ந்த ஆள்கள் தங்குவதற்கு உரிமையாளா்கள் அனுமதிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.