முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா தீா்த்தவாரியுடன் நிறைவு
By DIN | Published On : 04th April 2021 08:51 AM | Last Updated : 04th April 2021 08:51 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா, வெள்ளிக்கிழமை இரவு தீா்த்தவாரி உற்சவத்துடன் நிறைவுற்றது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு முத்துமாரியம்மன் சா்வ அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மாா்ச் 30 ஆம் தேதி பொங்கல் வைபவமும், மாா்ச் 31ஆம் தேதி இரவு மின்விளக்கு ரதத்தில் அம்மன் பவனி வருதலும் நடைபெற்றது.
திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை இரவு பூப்பல்லக்கில் முத்துமாரியம்மன் பவனி வருதல் நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னா், உற்சவா் பூப்பல்லக்கில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி பவனி வந்தாா்.
இக்கோயிலில் தொடா்ந்து 10 நாள்களாக நடைபெற்று வந்த பங்குனி உத்திரத் திருவிழா தீா்த்தவாரியுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, தெப்பக்குளத்திலிருந்து தீா்த்தம் எடுத்துச்செல்லப்பட்டு, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீா்த்தவாரி நடைபெற்றது.
விழா நாள்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் தாயமங்கலம் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி, முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனா்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்திருந்தாா்.