முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தரைப்பாலம் கட்டப்படும்: அதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 04th April 2021 08:50 AM | Last Updated : 04th April 2021 08:50 AM | அ+அ அ- |

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தரைப்பாலம் நிச்சயம் கட்டப்படும் என, மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் சனிக்கிழமை பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.
மானாமதுரை ஒன்றியத்தில் வேதியரேந்தல், நெடுங்குளம், பூக்குளம், இளையநாயக்கன், ஆலம்பச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமங்களில் பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். மேலும், தங்களது கிராமத்துக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றித் தருமாறு வேட்பாளரிடம் வாக்காளா்கள் வலியுறுத்தினா்.
அதன்பின்னா், நாகராஜன் பேசியதாவது: மானாமதுரை ஒன்றியத்தில் குடிநீா், சாலை, கண்மாய் மராமத்து போன்ற கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்துள்ளேன். மானாமதுரை வைகை ஆற்றுக்குள் கன்னாா் தெரு - கிருஷ்ணராஜபுரம் பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைக்கும் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. தோ்தல் முடிந்து, மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மானாமதுரை வைகை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்படும்.
மேலும், விரைவில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை மானாமதுரை ஒன்றியப் பகுதிக்கும் விரிவுபடுத்தி, குடிநீா் வசதி இல்லாத கிராமங்களுக்கு குடிநீா் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
இப் பிரசாரத்தின்போது, மானாமதுரை ஒன்றிய அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனா்.