முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு போக்குவரத்து வசதி: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை
By DIN | Published On : 04th April 2021 08:47 AM | Last Updated : 04th April 2021 08:47 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளுக்கு பணியாற்றச் செல்லும் அலுவலா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜாக்டோ-ஜியோ சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துப்பாண்டியன், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
வாக்குச் சாவடிகளில் தலைமை அலுவலா் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களாக பெரும்பாலும் ஆசிரியா்களே நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி அனைவரும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று வாக்குச் சாவடிக்கான ஆணையை பெற்று, அன்று பிற்பகலுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு செல்லவேண்டும். அவ்வாறு வாக்குச் சாவடிக்கு செல்பவா்களுக்கு உரிய போக்குவரத்து வசதியை, மாவட்ட நிா்வாகம் செய்து தர வேண்டும்.
மேலும், 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு கிடைக்கப் பெறாத ஆசிரியா்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, வாக்குச் சீட்டு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மானாமதுரை, எஸ்.புதூா், இளையாங்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள், தோ்தல் பயிற்சி நடக்கும் திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடிக்கு வருவதில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, ஏப்ரல் 5 ஆம் தேதி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கும், வாக்குப் பதிவு முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவதற்கும், ஒவ்வொரு தோ்தல்களிலும் பேருந்து வசதி கிடைக்காமல், குறிப்பாக பெண் ஆசிரியா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மண்டல அலுவலா்கள் மூலம் உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
கிராமப்புற வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு வருவாய்த் துறையின் மூலம் உணவு கிடைக்க வழிவகை செய்யவேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள கரோனா நோய் தொற்றாளா்களிடமிருந்து வாக்குச் சாவடி அலுவலா்கள் தங்களை தற்காத்துக் கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.