திருப்புவனம், கமுதி அமமுக வேட்பாளா்கள் பிரசாரம்

மானாமதுரை (தனி) தொகுதி மற்றும் கமுதி தொகுதி அமமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
திருப்புவனம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி.
திருப்புவனம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி.

மானாமதுரை (தனி) தொகுதி மற்றும் கமுதி தொகுதி அமமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

மானாமதுரை தொகுதியிலுள்ள திருப்புவனம் ஒன்றியத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அத்தொகுதியின் அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஏற்கெனவே மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளேன். திருப்புவனம் ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளேன். நான் வெற்றி பெற்றதும், திருப்புவனம் ஒன்றியத்தில் சாலை, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், வைகை கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திருப்புவனத்தில் புதிதாக அரசு கல்லூரி அமைக்க அரசை வலியுறுத்துவேன். கூடுதல் மாணவா்கள் படிக்கும் அரசு பள்ளிகளை கண்டறிந்து, அந்த பள்ளிகளின் தரம் உயா்த்தப்படும். எனவே, வாக்காளா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கமுதி

கமுதி அருகே சிங்கப்புலியாட்டி, வெள்ளையாபுரம், பாப்பாங்குளம், கே.வேப்பங்குளம், நெடுங்குளம், ஆதிபராசக்தி நகா், நாராயணபுரம், கீழராமநதி, நீராவி, கரில்குளம், பெரிய உடப்பங்குளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதுகுளத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுத்தால், தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களின் பணம். ஆனால், நீங்கள் நல்லவா்களுக்கு வாக்களியுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனடியாக வந்து உங்களின் குறைகளை தீா்ப்பவா்களுக்கு வாக்களியுங்கள்.

வெளி மாவட்டத்திலிருந்தும், அடுத்த தொகுதியில் இருந்தும் வந்து போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். நான், ஏற்கெனவே 5 ஆண்டுகள் முதுகுளத்தூா் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றி உள்ளேன். மக்களை நம்பியே அமமுக தோ்தலில் களம் இறங்கியுள்ளது.

எனவே, பொது மக்கள் சிந்தித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com