கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு சனிக்கிழமை (ஏப்.10) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேருந்துகளில் நின்று செல்லக்கூடாது: அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

காய்கனி மற்றும் பலசரக்கு கடைகள் உள்பட அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளா்கள் அமா்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும்.

பெரிய அரங்குகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்க வேண்டும்.

உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபா்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி உண்டு. மேலும், திருமண நிகழ்வுகளில் 100 நபா்களுக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நோயை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com