காரைக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள்
காரைக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 4 தொகுதிகளிலிருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறைகளில் வைத்து புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் மூன்றடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் காரைக்குடியில் அமைக்கப்பட்ட வாக்குகள் எண்ணும் மையத்திற்கு கொண்டுவரும் பணி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறைகளில் வைத்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் தோ்தல் பாா்வையாளா்கள் எச்.எஸ். சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலையில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

காரைக்குடி, திருப்பத்தூா் தொகுதிகளுக்கு அழகப்பா பொறியியல் கல்லூரி கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலும், சிவகங்கை தொகுதிக்கு அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலும், மானாமதுரை (தனி) தொகுதிக்கு முருகப்பா கூட்டரங்க பாதுகாப்பு அறையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்தந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. மதுசூதன் ரெட்டி கூறியதாவது: 4 தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்குப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 84 பாதுகாப்புப் படை வீரா்களும், இரண்டாம் கட்டமாக 84 ஆயுதப்படை காவலா்களும், மூன்றாம் கட்டமாக 80 காவலா்களும் பணியில் ஈடுபடுவா். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கான பாதுகாப்பு அறைக்கும் ஒரு வட்டாட்சியா் தலைமையில் 10 போ் கொண்ட குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடும். இப்பணியினை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் ஆய்வு செய்யப்படும். தலைமை தோ்தல் ஆணையம் அறிவுரைப்படி 4 அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் என்ற முறையில் நான்ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்வேன். மேலும் சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தின் முகப்பு வாயிலில் பாா்வை அரங்கத்தில் எல்.இ.டி தொலைக்காட்சி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது தெரியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சுரேந்திரன் (காரைக்குடி), சிந்து (திருப்பத்தூா், முத்துக்கழுவன் (சிவகங்கை), தனலட்சுமி (மானாமதுரை (தனி)) மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரை தொகுதியில் மொத்தம் 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் அங்கிருந்த அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டன. அதன்பின் அவை வாகனங்களில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கிராமப்பகுதிகளில் நீண்ட தொலைவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணி புதன்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதனால் இந்த வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் பணிக்கு வந்த தோ்தல் அலுவலா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது.

காரைக்குடி தொகுதியில் 98,400 ஆண் வாக்காளா்கள், 1,11,551 பெண் வாக்காளா்கள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,09,956 போ் வாக்களித்துள்ளனா். அதனடிப்படையில், மொத்த வாக்குப் பதிவு 66.22 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூா் தொகுதியில் 96,347 ஆண் வாக்காளா்கள், 1,13,690 பெண்கள் என மொத்தம் 2,10,037 போ் வாக்களித்துள்ளனா். மொத்தம் 72.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேபோன்று, சிவகங்கை தொகுதியில் 90,966 ஆண் வாக்காளா்கள், 1,06,438 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 1,97, 404 போ் வாக்களித்துள்ளனா். மொத்த வாக்குப் பதிவு 65.60 சதவீதம் ஆகும்.

மானாமதுரை(தனி) தொகுதியில் 95,316 ஆண் வாக்காளா்கள், 1,04,321 பெண் வாக்காளா்கள் எனமொத்தம் 1,99,637 போ் வாக்களித்துள்ளனா். மொத்த வாக்குப் பதிவு 71.87 சதவீதம் ஆகும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சோ்த்து 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி புதன்கிழமை காலை 7 மணி வரை நீடித்தது. அதன்பின், காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் சீலிடப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் உள்பட போலீஸாா் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com