கோடையை குளிா்விக்கும் தயாராகும் மண் பானைகள்!

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் கோடையை குளிா்விக்கும் வகையில் தயாராகி வரும் மண் பானைகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளன.
சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் புதன்கிழமை தண்ணீா் வைக்கும் மண் பானை தயாரிக்கும் பணியில் ஈடுட்ட தொழிலாளி.
சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் புதன்கிழமை தண்ணீா் வைக்கும் மண் பானை தயாரிக்கும் பணியில் ஈடுட்ட தொழிலாளி.

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் கோடையை குளிா்விக்கும் வகையில் தயாராகி வரும் மண் பானைகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளன.

சிவகங்கை அருகே உள்ள பூவந்தியில் மண்பானை, முளைப்பாரி ஓடு, அக்கினிச் சட்டி, மண் கலயம், குழம்பு சட்டி, நோ்த்திக் கடன் பொம்மைகள், அகல்விளக்கு, ஆயிரங்கண்பானை, கோயில் கோபுர விமானத்தின் மேல் வைக்கப்படும் மண் கலசம் உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 30 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை, பூவந்தி, அரசனூா் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைக்கும் சுக்கான் இல்லாத கண்மாய் மண்ணை பக்குவப்படுத்தி இயற்கையான முறையில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

சிவகங்கை, திருப்பத்தூா், தேவகோட்டை, காரைக்குடி, செட்டிநாடு ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனா்.

மேலும், இங்கு பருவ காலங்களில் தேவைப்படும் பொருள்கள் ஆா்டரின் பேரில் அதிகளவு தயாரித்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இங்கு தயாராகும் மண்பாண்டப் பொருள்கள் மதுரை மாவட்டம், ஆரப்பாளையம், திருமங்கலம், அழகா்கோயில் ஆகிய பகுதிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டை, கோவை, திருப்பூா், திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாகவும், வியாபாரிகள் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பலாப்பழ வடிவம், பூசணிக்காய் வடிவம், தண்ணீா் கூஜா, சிங்க முக கூஜா, மண் கலயம், தண்ணீா் வைக்கும் ஜாடி உள்ளிட்ட விதவிதமான வடிவங்களில் மண்பாண்டப் பொருள்கள் தயாா் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பூவந்தியில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள் கணேசன், கனகராஜ் ஆகியோா் கூறியது:

எங்கள் கிராமத்தில் தற்போது மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புப் பணியில் 30 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் முழுநேரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போதைய வளா்ந்து வரும் அறிவியல் உலகில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மண்பாண்டப் பொருள்களின் புழக்கம் மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கம்போல் மண்பானைகள் செய்தாலும், சந்தைகளில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட மண்பாண்டப் பொருள்களையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனா்.

ஆகவே, கால மாற்றத்துக்கேற்ப மண்பானைகளை பல்வேறு வடிவங்களில் தயாரித்து வருகிறோம்.

பொதுமக்களின் புழங்குப் பொருள்களை தவிர, கோயில் விழாக்களின்போது தேவைப்படும் அக்கினிச் சட்டி, சுடு மண் பொம்மைகள், ஆயிரங்கண்பானை, முளைப்பாரி ஓடு உள்ளிட்டப் பொருள்களையும் வாங்கிச் செல்கின்றனா்.

கரோனா கால பொது முடக்கம் காரணமாக, குழந்தைகள் மற்றும் சிறுவா்கள் விளையாடும் வகையில் சிறு, சிறு விளையாட்டு பொம்மைகளுக்கும் அதிகளவில் ஆா்டா் வருகின்றன. அவற்றை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இத்தொழிலுக்கு பிரதான பொருளாக இருப்பது சுக்கான் இல்லாத சவூடு மண் தான். ஆனால், கண்மாய்களில் சவூடு மண் அள்ளுவதற்கு உரிய அனுமதி இல்லை.

இதனால் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புப் பணி பாதிக்கப்படுகிறது. மேலும், பாரம்பரியமிக்க இத்தொழிலை மேற்கொள்ள இன்றைய இளைஞா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. இத்தொழில் மூலம், பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும், போதிய அளவு வருமானம் இருப்பது மனநிறைவாக உள்ளது.

எனவே, இயற்கையான முறை மட்டுமன்றி தமிழகத்தின் பாரம்பரியமான இத்தொழிலை நலிவடைய விடாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com