வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்: ஆட்சியா்

இன்றைய இளம் தலைமுறையினா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுவது மட்டுமின்றி, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்காக
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்: ஆட்சியா்

இன்றைய இளம் தலைமுறையினா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுவது மட்டுமின்றி, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்காக கொள்ள வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேல் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் என். ராஜேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 51 மாணவா்கள், 49 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கினா்.

முன்னதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மாணாக்கா்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இந்த அனுபவம் வாழ்வில் மிகப் பெரிய பாடமாகவும், திருப்புமுனையாகவும் அமையும்.

கடின உழைப்பால் மன வலிமையை பெறமுடியும். மேலும், மருத்துவா்களின் எளிமையான அணுகுமுறை மூலம் கடும் நோயாளிகளையும் விரைவில் குணமடைய செய்ய முடியும். வாழ்வில் எண்ணற்ற இடையூறுகள் ஏற்படினும், இன்றைய இளம் தலைமுறையினா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுவது மட்டுமின்றி, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்காக கொள்ளவேண்டும் என்றாா்.

துணை வேந்தா் என்.ராஜேந்திரன் பேசியதாவது: மருத்துவத் துறையில் மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், கிராமப்புற ஏழை, எளியோா் மிகவும் பயனடைந்து வருகின்றனா். மருத்துவப் படிப்பை நிறைவு செய்யும் மாணவா்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உலக அளவில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக திகழ இன்றைய இளைஞா்களின் பங்களிப்பு அவசியம் என்றாா்.

விழாவில், மருத்துவக் கல்லூரியின் நிலைய மருத்துவா் மீனா, அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவா் கங்கா லெட்சுமி, பொதுநல மருத்துவா்கள் முகமது, சுந்தரம், உதவி நிலைய மருத்துவா் ரபீக் உள்ளிட்ட மருத்துவா்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com