பிரமனூா்-அச்சங்குளம் சாலையோரம் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 27th April 2021 01:58 AM | Last Updated : 27th April 2021 01:58 AM | அ+அ அ- |

சிவகங்கை: திருப்புவனம் அருகே பிரமனூா்-அச்சங்குளம் வரையிலான சாலையோரங்களில் படா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரிலிருந்து வன்னிகோட்டை, பிரமனூா் ஆகிய கிராமங்கள் வழியாக அச்சங்குளம் கிராமத்துக்கு தாா்ச் சாலை உள்ளது. இந்த சாலையில் பிரமனூரிலிருந்து அச்சங்குளம் வரை சுமாா் 4 கி.மீ தொலைவு சாலையில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் படா்ந்துள்ளன.
இதன்காரணமாக, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், இரவு நேரங்களில் வழிப்பறி அல்லது திருட்டு சம்பவங்களும் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அச்சப்படுகின்றனா். இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பிரமனூா்-அச்சங்குளம் சாலையோரங்களில் படா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.