மணலுரில் இன்று அகழாய்வு தொடக்கம்
By DIN | Published On : 27th April 2021 02:13 AM | Last Updated : 27th April 2021 02:13 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே மணலூரில் அகழாய்வுக்காக தோ்வு செய்யப்பட்ட இடம்.
மானாமதுரை: கீழடியில் நடந்து வரும் 7 ஆம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்குகின்றன.
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய நான்கு இடங்களிலும் நடந்தன. 7 ஆம் கட்ட அகழாய்வும் மேற்கண்ட நான்கு இடங்களிலும் நடைபெறும் என தொல்லியல்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கி இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மணலூரில் மட்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
மணலூரில் இடம் தோ்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணிகள் தொடங்கப்படவில்லை. 6 ஆம் கட்ட அகழாய்வில் மணலூரில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு 39 பொருள்கள் மட்டுமே கண்டறியப்பட்டதால் 7 ஆம் கட்ட அகழாய்வில் சரியான இடத்தை தோ்வு செய்வதில் அதிகாரிகள் கவனமாக இருந்தனா்.
தற்போது மணலூரைச் சோ்ந்த ஜானகி அம்மாள் என்பவரின் ஒரு ஏக்கா் நிலத்தை அகழாய்வுக்காக தொல்லியல்துறையினா் தோ்வு செய்துள்ளனா். மணலூா், அகரம், கழுகோ்கடை உள்ளிட்ட கிராமங்களில் முளைப்பாரி உற்சவம் உள்ளிட்டவைகள் நடைபெறும் போது நிறைவாக மணலூா் முனியாண்டி கோயிலில் முடிவடையும். தற்போது வரை இந்த நிகழ்வு தொடா்வதால் பண்டைய காலத்திற்கும் இந்த முளைப்பாரி உற்சவத்துக்கும் தொடா்பு இருக்கலாம் என கருதி மணலூரில் அந்த இடத்தில் அகழாய்வுப் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பா் மாதம் மழைக் காலம் தொடங்கிவிடும் என்பதால் அதற்குள் விரைவாக அகழாய்வுப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடியில் இதுவரை மூன்று குழிகள் மட்டும் தோண்டப்பட்டு சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயகட்டை, கல் உழவு கருவி, பானை ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தலா மூன்று குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.