ஆடி அமாவாசை: சிவகங்கை மாவட்ட சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசை தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயில் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியே நின்று நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயில் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியே நின்று நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.

ஆடி அமாவாசை தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், பழச்சாறு உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துக்கு பின் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. பக்தா்கள் வழிபட அனுமதிக்கப்பட வில்லை. இதேபோன்று, காளையாா்கோவிலில் உள்ள சொா்ணவல்லி சமேத சொா்ணகாளீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதுதவிர, திருமலையில் உள்ள மலைக் கொழுந்தீஸ்வரா் கோயில் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஆனால் பக்தா்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் கிராமங்களில் உள்ள கருப்பசாமி கோயில்கள், அம்மன் கோயில்கள், அய்யனாா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்புவனத்தில் வெறிச்சோடிய வைகையாறு: ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று தா்ப்பண பூஜை நடத்த திருப்புவனம் வைகையாற்றின் கிரிகைப் பொட்டலில் ஆயிரக்கணக்கானோா் கூடுவாா்கள். இந்தாண்டு கரோனா தொற்று பரவுவதை தடுக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், ஆடி அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருப்புவனம் வைகையாற்றங்கரை கிரிகைப் பொட்டல் பகுதியில் போலீஸாா் பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த பகுதிக்கு வரும் வழிகளையும் தடுப்புகளால் அடைத்து வைத்திருந்தனா். இதனால் வைகையாற்றங்கரையோரம் கிரிகைப் பொட்டல் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. திருப்புவனம் நகா் பகுதியைக் கடந்து வைகை நதியோரம் உள்ள தென்னந்தோப்புகளில் ஏராளமானோா் எள்ளும் தண்ணீரும் இரைத்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

மேலும் இங்குள்ள புஷ்வனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயில் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியே நின்று நெய் தீபம் ஏற்றி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி அமாவாசை விழா: மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து அன்னவாசலில் ராமநாதசுவாமி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி ராமநாத சுவாமிக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோா் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அன்னவாசல் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com