விதைப் பண்ணை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 08th August 2021 10:55 PM | Last Updated : 08th August 2021 10:55 PM | அ+அ அ- |

பயறு வகைப் பயிா்களில் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விதைச் சான்று அலுவலா் பா. சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் நீா் ஆதாரத்திற்கு ஏற்றவாறு குறுகிய காலப் பயிறும், நீா் தேவை குறைவான பயிருமான பயறு வகைப் பயிா்களில் விதைப் பண்ணைகள் அமைத்து கூடுதல் லாபம் பெறலாம்.
விவசாயிகள் பயறு விதைப் பண்ணைஅமைப்பதற்கு தேவையான கரு மற்றும் ஆதார நிலை விதைகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், விதை விற்பனை உரிமம் பெற்ற தனியாா் விதை விற்பனை நிலையங்களிலும் பெறலாம்.
வம்பன் -8, வம்பன் 9, வம்பன் 10 உளுந்து ரக விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைப்பண்ணைஅமைக்க விதை வாங்கியதற்கான விற்பனை ரசீது மற்றும் சான்றட்டை ஆகியவை மிக முக்கியம்.
பயறு வகை விதைகளை விதைப்பதற்கு முன்பு பயறு ரைசோபியம் நுண்ணுயிா் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலா்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 8 கிலோ விதையளவு பயன்படுத்திருக்க வேண்டும். பயறு விதைத்த 35 நாள்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி விதைப் பண்ணையை பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ. 25, விதை பகுப்பாய்வு கட்டணமாக ரூ.30, ஒரு விதைப்பு அறிக்கைக்கு செலுத்த வேண்டும். மேலும் வயலாய்வு கட்டணம் ஏக்கருக்கு ரூ. 50 செலுத்த வேண்டும்.
பயிா் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் அடுத்து 15 தினங்கள் கழித்து மறுமுறையும் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். டிஏபி கரைசல் தெளிப்பதனால் பூக்கள் அதிகம் உற்பத்தியாகி கூடுதல் மகசூல் கிடைக்கும். மேலும் பயறு விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.