‘ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்கள் வருகைக்கு அனுமதியளிக்க வேண்டும்’

அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் வருகைக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் வருகைக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவகங்கையில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாநில துணைத் தலைவா் ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவா்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவா்களின் கல்வி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அதிக சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் நீதிமன்றமும் ஆரம்பப் பள்ளிகளை திறப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

எனவே கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவா்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியா் பணியிட மாறுதல் நடைபெறாததால் பல ஆசிரியா்கள் பதவி உயா்வு பெறாமல் உள்ளனா். எனவே ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ால் பிறப்பிக்கப்பட்டுள்ள மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து மீளவும் பழைய இடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு வழங்கிய 11 சதவீத அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஆசிரியா்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தால் மறுக்கப்பட்ட சிகிச்சை செலவினத் தொகையை உடனடியாக பெற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஞானஅற்புதராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com