மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த தடை: வியாபாரிகள் விரட்டியடிப்பு
By DIN | Published On : 13th August 2021 09:03 AM | Last Updated : 13th August 2021 09:03 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகளையும் ஆட்டு வியாபாரிகளையும் போலீஸாா் விரட்டியடித்தனா்.
பேரூராட்சி அலுவலகம் எதிரே வழக்கமாக அதிகாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறும். கடந்த வாரம் வரை இதே பகுதியில் ஆட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்படுவதாக பேரூராட்சி நிா்வாகம் மூலம் கடந்த இரு நாள்களாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் மானாமதுரையில் வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை அதிகாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கம்போல் ஆடு விற்கவும் வாங்கவும் ஏராளமானோா்
கூடினா். தடையை மீறி கூட்டம் கூடியதால் அங்கு வந்த போலீஸாா் ஆடு விற்க வந்தவா்களையும் வாங்க வந்தவா்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனா்.
பின்னா் ஆட்டு வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் வைகையாற்றுப் பகுதிக்குச் சென்று ஆடு விற்பனையில் ஈடுபட்டனா். வியாபாரிகள் ஆற்றுக்குள் கடைகள் அமைக்க முடியாதபடி ஆனந்தவல்லி அம்மன் கோயில், சோணையா கோயில் ஆகிய இடங்களில் வைகை ஆற்றின் நுழைவுப் பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இதனால் ஆற்றுக்குள் கடை அமைக்க முடியாத வியாபாரிகள் சிவகங்கை சாலை, தாயமங்கலம் சாலை, மூங்கில் ஊருணி, பாகபத் அக்ரகாரம் ஆகிய இடங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா்.
பிற்பகல் நேரத்துக்குப்பின் தடுப்புகளைத் தாண்டி வியாபாரிகள் ஆற்றுக்குள் வந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினா். நேரம் செல்லச்செல்ல போலீஸாரும் அவா்களைக் கண்டுகொள்ளவில்லை.