இளையான்குடியில் சந்தைக்கு வந்த பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற மாற்றுத்திறனாளி

இளையான்குடியில் சனிக்கிழமை சந்தைக்கு வந்த பெண்ணிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை மாற்றுத்திறனாளி நபர் பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. 
இளையான்குடியில் மாற்றுத்திறனாளி நபரால் ஏமாற்றப்பட்டு 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்.
இளையான்குடியில் மாற்றுத்திறனாளி நபரால் ஏமாற்றப்பட்டு 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்.

இளையான்குடியில் சனிக்கிழமை சந்தைக்கு வந்த பெண்ணிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை மாற்றுத்திறனாளி நபர் பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழ நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி பஞ்சவர்ணம் (68), இவர் இளையான்குடியில் நடந்த வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கிராமத்திலிருந்து டவுன் பஸ்சில் ஏறி இளையான்குடி வந்தார். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த வாரச்சந்தையில் பஞ்சவர்ணம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் படிப்பறிவில்லாத பஞ்சவர்ணத்தை அணுகி உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் கொடுங்கள் எனக் கூறியுள்ளார். 

இவரது பேச்சை நம்பிய பஞ்சவர்ணம் அவருடன் சந்தைக்கு எதிரே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அந்த மாற்றுத்திறனாளி நபர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு விண்ணப்பத்தை எழுதி அதில் பஞ்சவர்ணத்தின் கைரேகையை பதிவு செய்துள்ளார்.  அன்பின் இந்த விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு கொண்டு போய் அங்கிருப்பவர்களிடம் கொடுங்கள் எனக் கூறி பஞ்சவர்ணத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பஞ்சவர்ணம் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயன்றபோது அந்த மாற்றுத்திறனாளி நபர் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை கழட்டி என்னிடம் கொடுங்கள். 

வெறும் கழுத்துடன் சென்று விண்ணப்பம் கொடுத்தால்தான் நீங்கள் வறுமையில் உள்ளீர்கள் என நம்புவார்கள். திரும்பி வந்து சங்கிலியை என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய பஞ்சவர்ணம் தனது கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை கழட்டி அந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி நபரரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் பஞ்சவர்ணம் அலுவலகத்திற்கு உள்ளே சென்று விட்டு வெளியே வந்து பார்த்தபோது அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை காணவில்லை. அலுவலக வளாகத்தில் அவரைத் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்காததால் பஞ்சவர்ணம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அழுது புலம்பி கூச்சலிட்டார்.

வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் வெளியே வந்து அந்த மூதாட்டியிடம் விசாரித்தபோது அவர் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். 

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு சந்தைக்கு வந்த பெண்ணை முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் என்று கூறி மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் ஏமாற்றி சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதே போன்று நடந்துள்ளது. இளையான்குடி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பஞ்சவர்ணத்தை ஏமாற்றி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மாற்றுத்திறனாளி நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com