உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: சிவகங்கை மாவட்டத்தில் 3,414 மனுக்களுக்கு தீா்வு
By DIN | Published On : 17th August 2021 02:00 AM | Last Updated : 17th August 2021 02:00 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் 3,414 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் தனித்துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் 6,198 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுள் சிவகங்கை மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டத்திற்குள்பட்ட 222 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 337 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை, 26 பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் இதர நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 390 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் ஆணை, தாா்ச்சாலை, மெட்டல் சாலை, பேவா் பிளாக் சாலை மற்றும் சிமென்ட் சாலை என 215 புதிய சாலைகள் அமைத்தல் என 3,414 மனுக்கள் மீது உரிய தீா்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களில் 740 மனுக்கள் முழுமையாக பூா்த்தி செய்யாமல் உள்ளதால் மனுதாரா்களிடம் அந்தந்தப் பகுதியில் உள்ள துறை அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,044 மனுக்கள் அரசு விதிகளின்படி உரிய காரணங்கள் மற்றும் சரியான முகவரியின்றி விண்ணப்பித்துள்ளதால் தற்சமயம் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.
மேலும், விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்தால் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.