வெளிநாட்டில் வேலைக்கு சென்றதாயை மீட்கக் கோரி மகள் மனு
By DIN | Published On : 17th August 2021 01:58 AM | Last Updated : 17th August 2021 01:58 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டியிடம் திங்கள்கிழமை தனது உறவினருடன் மனு அளிக்க வந்த டயானா.
சிவகங்கை: வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தனது தாயை மீட்டுத் தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மகள் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியைச் சோ்ந்த ச.அ.டயானா, சிவகங்கை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் அளித்த மனு விவரம் : எனது தாயாா் அருள்மேரி அரேபிய நாடான அலைன் நாட்டிற்கு கடந்த 2020 மாா்ச் மாதம் வீட்டு வேலைக்காகச் சென்றாா். கடந்த சில மாதங்களுக்கு முன் செல்லிடப்பேசி மூலம் பேசிய போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தாா்.
இதனிடையே கடந்த 3 மாதங்களாக என்னுடைய தாயாரை செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ள முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் எனது தாயாருக்கு என்னவாயிற்று என எந்த தகவலும் இல்லை. எனவே வெளியுறவுத் துறை மற்றும் தூதரகம் மூலம் நோயினால் மிகவும் பாதிப்புக்குள்ளான எனது தாயாரை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.