அகரத்தில் 13 அடுக்கு உறை கிணறு கண்டெடுப்பு
By DIN | Published On : 31st August 2021 11:34 PM | Last Updated : 31st August 2021 11:34 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், அகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறு.
சிவகங்கை மாவட்டம், அகரத்தில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வில் 13 அடுக்கு உறை கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 7 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இதில், சுடுமண் முத்திரை, காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, உருவ பொம்மை, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய புழங்குப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 13 அடுக்கு உறைகள் கொண்ட கிணறு அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வுப் பணி மேற்கொள்ளும் தொல்லியலாளா்கள் செவ்வாய்க்கிழமை கூறியது: அகரத்தில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் 13 அடுக்கு உறை கிணறு அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மேற்புறத்தில் உள்ள 2 உறைகள் சிதைந்துள்ளன.
அகரத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியின்போது சுமாா் 25-க்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டெடுக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள உறை கிணறு 13 அடுக்குகள் என்றாலும், அதே குழியில் இன்னும் அகழாய்வுப் பணி மேற்கொள்ளும் போது கூடுதலாக உறைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.