முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சுழல்நிதிக் கடன் திட்டம் மூலம் கிராமப்புறப் பெண்கள் பயன்பெற வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 10th December 2021 08:59 AM | Last Updated : 10th December 2021 08:59 AM | அ+அ அ- |

கல்லல் அருகே பாடாத்தான்பட்டியில் வியாழக்கிழமை, மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.
சுழல்நிதிக் கடன் திட்டத்தின் மூலம் கிராமப்புறப் பெண்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பாடாத்தான்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. இதில் 362 மனுக்கள் பெறப்பட்டு பயனாளிகளுக்கு ரூ. 46.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியது:
அரசின் திட்டங்கள் முழுமையாக கிராமப் பகுதிகளுக்குச் சென்றடைய வேண்டும். 15 நாள்களுக்கு முன்பு வருவாய்த்துறையின் மூலம் பெறப்பட்ட 225 மனுக்களில் 160 பயனாளிகளுக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 137 மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்களைத்தேடி மருத்துவம், வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் ஐந்து துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கிராமப் பகுதிகளில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகையில் சுயதொழில் தொடங்க சுழல்நிதிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்றாா்.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன், துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சொா்ணம் அசோகன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.