முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு: சிவகங்கை மாவட்டத்தில் 3.06 லட்சம் வாக்காளா்கள்
By DIN | Published On : 10th December 2021 08:55 AM | Last Updated : 10th December 2021 08:55 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 750 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் துறை சாா்பில் நகா்ப்புறத் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும் 82,813 ஆண் வாக்காளா்கள், 86,853 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 10 போ் என மொத்தம் 1,69,676 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். அதேபோன்று, 11 பேரூராட்சிகளில் 66,668 ஆண் வாக்காளா்கள், 70,404 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 2 என மொத்தம் 1,37,074 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 3,06,750 வாக்காளா்கள் உள்ளனா்.
மேலும், மாநில தோ்தல் ஆணையம் அறிவுரைப்படி, வேட்பாளா்கள் விண்ணப்பம் வழங்குவதற்கு முன்பு வரை புதிய வாக்காளா் படிவங்கள் பெறப்பட்டு இணைப்புப்பட்டியல் பின்னா் வெளியிடப்படும் என ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நகா்ப்புறத் தோ்தல்) லோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.