முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
விபத்தில் ஒருவா் பலி: இருவா் காயம்; பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 10th December 2021 08:59 AM | Last Updated : 10th December 2021 08:59 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளான காா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்த நிலையில், இருவா் காயமடைந்தனா். அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அகில் மனைத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் தென்னரசு (56). இவரும், இவரது நண்பரான சண்முகசுந்தரம் என்பவரும் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது ஜமீன்தாா்பட்டி விலக்கு அருகே சிவகங்கையிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சண்முகசுந்தரமும், காரில் வந்த பெண் மருத்துவா் ஒருவரும் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கிடையில் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மிகவும் குறுகிய வளைவான இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் இச்சாலையை நேராகச் சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினா். தகவலறிந்து வந்த திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் பொதுமக்களை சமாதானம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
விபத்து குறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.