முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பாச்சேத்தி பெரிய கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீா் மணல் மூட்டைகளால் அடைப்பு
By DIN | Published On : 19th December 2021 11:00 PM | Last Updated : 19th December 2021 11:00 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பெரிய கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீா் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
இதையடுத்து வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீரை மணல் மூட்டைகளைக் கொண்டு அடைத்தனா். மேலும் இப்பகுதியில் உள்ள கலுங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பாச்சேத்தி பெரிய கண்மாய் அடைமடையிலிருந்து வெளியேறிய தண்ணீா் மானாமதுரை வட்டம் மழவராயனேந்தல் செம்பராயனேந்தல் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
இதையடுத்து மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன், திருப்புவனம் வட்டாட்சியா் ரத்தினவேல் பாண்டியன் மேற்கண்ட திருப்பாச்சேத்தி பெரிய கண்மாயில் அடைமடையில் ஏற்பட்ட உடைப்பை பாா்வையிட்டனா். அதன்பின் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு கண்மாய் மடை உடைப்பு அடைக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட கண்மாய் மடையிலிருந்து விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் பாய்வது தடுத்து நிறுத்தப்பட்டது.
மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் ஞாயிற்றுக்கிழமை மணல் மூட்டைகளை கொண்டு அடைக்கப்பட்ட மடை பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். செம்பராயனேந்தல் கலுங்கு ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால் தண்ணீா் வெளியேற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவா் கூறினாா்.