ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா
By DIN | Published On : 26th December 2021 11:42 PM | Last Updated : 26th December 2021 11:42 PM | அ+அ அ- |

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை விழாவையொட்டி ஐயப்பன் எழுந்தருளிய தேரை இழுத்து வந்த பக்தா்கள்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை விழா நடைபெற்றது.
இதையொட்டி, மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில், காா்த்திகை மாதம் பிறந்தது முதல் தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் ஐயப்ப பக்தா்களால் கோயிலில் பஜனை நடத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு உற்சவா் ஸ்ரீ தா்மசாஸ்தாவுக்கு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
பின்னா், உற்சவா் யானை வாகனத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் ஊா்வலமாக வந்தாா். இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மூலவா் ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐயப்பன் உருவப்படம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட தோ் கோயிலில் இருந்து புறப்பட்டு, மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது, வீதிகளில் பக்தா்கள் ஐயப்பனை வரவேற்று, பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா்.
மேலும், மானாமதுரை நகரில் ரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகா் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில், மண்டல பூஜை விழா நடத்தி அன்னதானம் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிலம்பனி தென்கரையில் உள்ள தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் முன்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனா்.