முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை அருகே பயணிகள் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
By DIN | Published On : 31st December 2021 08:55 AM | Last Updated : 31st December 2021 08:55 AM | அ+அ அ- |

பல மாதங்களுக்கு பின்னா், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் வியாழக்கிழமை நின்று சென்ற பயணிகள் ரயிலுக்கு, பொதுமக்கள் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
கரோனா தொற்று பொது முடக்கத்துக்கு முன், மதுரை- ராமேசுவரம்- மதுரை இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. இந்த ரயில் மூலம், ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயனடைந்தனா்.
பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டு ரயில்கள் இயக்கப்பட தொடங்கியதும், வழக்கம்போல் மதுரை-ராமேசுவரம்-மதுரை இடையே இந்த பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஆனால், ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.
எனவே, இந்த ரயிலை ராஜகம்பீரத்தில் நின்று செல்ல மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதனடிப்படையில், மதுரை- ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில் டிசம்பா் 30-ஆம் தேதி முதல் ராஜகம்பீரத்தில் நின்று செல்லும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு வந்த இந்த பயணிகள் ரயில், ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, இப்பகுதி மக்கள் ரயில் ஓட்டுநா்களுக்கு சால்வைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனா். மேலும், இந்த ரயிலில் ஏறிய பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.