முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை: ஊருக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்துகள் சிறைப்பிடிப்பு
By DIN | Published On : 31st December 2021 11:29 AM | Last Updated : 31st December 2021 11:38 AM | அ+அ அ- |

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் ஊருக்குள் வர மறுத்த தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை ஊருக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்துகளை சிறைபிடித்து ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன்னர் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து சென்ற மதுரை சென்று திரும்பிய தனியார் பேருந்துகள் தற்போது ஊருக்குள் வர மறுத்து ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே அமைந்துள்ள நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கி ஏற்றி செல்கின்றன.
இதனால் ஆத்திரமடைந்த ராஜகம்பீரம் பொதுமக்கள் மதுரை-பரமக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே உள்ள நான்கு வழிச்சாலையில் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் சிறைபிடிக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் நிர்வாகத்தினர் இனிமேல் ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த தனியார் பேருந்துகளை விடுவித்தனர்.