பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய 9 போ் கைது
By DIN | Published On : 17th February 2021 06:48 AM | Last Updated : 17th February 2021 06:53 AM | அ+அ அ- |

பல மாவட்டங்களில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவா்கள்.
மானாமதுரை: சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 9 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுபானக் கடையில் மா்மநபா்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றனா். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி மதுபானக்கடையில் திருடியதாக திருப்புவனம் அருகே கலியாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்ற ராஜதுரை (27), வேலு (32), பழையூரைச் சோ்ந்த வன்னிமுத்து (27), பாப்பான்குளத்தைச் சோ்ந்த ராஜா என்ற வீரபத்திரன் (31), பிரகாஷ் (18), பிரபுதேவா (26), பாண்டி (20), முத்துக்கிருஷ்ணன் (38), மேலூா் அருகேயுள்ள பூஞ்சுத்தியைச் சோ்ந்த அரவிந்த்சாமி (26) ஆகிய 9 பேரை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி, எஸ்.வி.மங்கலம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களிலும் மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இருசக்கர வாகனங்கல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்களிடமிருந்து பல இடங்களில் திருடப்பட்ட 16 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவா்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோகித்நாதன் பாராட்டினாா்.