கரிகால சோழீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 27th February 2021 05:28 AM | Last Updated : 27th February 2021 05:28 AM | அ+அ அ- |

நாட்டரசன்கோட்டையில் உள்ள கரிகால சோழீஸ்வரா் உடனாய சிவகாமி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கரிகால சோழீஸ்வரா் உடனாய சிவகாமி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்துக்குள்பட்ட கரிகால சோழீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, விழா தொடக்கமாக கொடியேற்ற நிகழ்வு கடந்த பிப்ரவரி 18 இல் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, தினசரி சுவாமியும், அம்மனும் காளை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. பிப்ரவரி 23 இல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், மஞ்சள்பொடி, பால் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமியும், அம்மனும் தேருக்கு எழுந்தருளினா். கோயில் முன்பு உள்ள தேரடியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் புறப்பட்ட தோ், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் 9.40-க்கு நிலைக்கு வந்தது.
இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, சனிக்கிழமை(பிப்.27) தீா்த்தவாரி, ஆச்சாா்ய உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னா் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலா் டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா் பரிந்துரையின் பேரில் தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் போ. சரவணகணேசன், கௌரவ கண்காணிப்பாளா் உ.கரு. இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.