சிவகங்கையில் ஜன. 9-இல் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் தா்னா

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன் வரும் ஜன. 9 ஆம் தேதி தா்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன் வரும் ஜன. 9 ஆம் தேதி தா்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜோசப் ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 2016 ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின் போது தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அன்றைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை மாநிலத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இரண்டம் கட்டமாக வரும் ஜனவரி 9 ஆம் தேதி சிவகங்கை அரண்மனை வாசல் முன் மாவட்ட அளவில் தா்னா நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஞானஅற்புதராஜ், சிங்கராயா், மாவட்ட துணைத் தலைவா் அமலசேவியா், மாவட்ட துணைச் செயலா்கள் ரவி, ஜெயக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com