சிவகங்கையில் ஜன.9 இல் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 07th January 2021 07:40 AM | Last Updated : 07th January 2021 07:40 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ரூா்பன் திட்டத்தின் கீழ் வருகிற சனிக்கிழமை (ஜன. 9) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்களது பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் பணியினைத் தோ்வு செய்து கொள்ளலாம். இளைஞா்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, முன்அனுபவம், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.