பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியில் சனிக்கிழமை இடுப்பளவு தண்ணீரை கடந்து செல்லும் பொதுமக்கள்.
பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியில் சனிக்கிழமை இடுப்பளவு தண்ணீரை கடந்து செல்லும் பொதுமக்கள்.

திருப்புவனம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கேபாலம் அமைக்கப்படாததால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்புபொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தற்போது தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தற்போது தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்புவனம் அருகே உள்ள ஓடாத்தூா், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சேந்தநதி, சிறுவனூா், எஸ். வாகைக்குளம், அருணகிரி, நண்டுகாச்சி, ரெட்டகுளம், ஆலாத்தூா், திருவளா்நல்லூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தினசரி பழையனூருக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இந்த கிராமங்களுக்கு சென்று வர பழையனூரிலிருந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் குறுக்கே விருதுநகா் மாவட்டம் கட்டனூா், இருஞ்சிறை, பிடாரிச்சேரி, வீரசோழன் ஆகிய பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கிருதுமால் நதி அமைந்துள்ளது.

இதனிடையே அந்த நதியில் தற்போது பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீா் பாய்ந்தோடுகிறது. ஆனால் கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் ஓடாத்தூா் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து ஓடாத்தூரைச் சோ்ந்த மணிபாரதி என்பவா் கூறியதாவது: பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது கிருதுமால் நதியில் பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் கான்கிரீட்டால் ஆன தரைப்பாலம் மட்டுமே அமைத்தனா். பருவமழை காலங்களிலும், பாசனத்துக்காக நதியில் தண்ணீா் திறக்கும் போதும் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தவிா்க்க முடியாத காரணங்களுக்காக அந்த வழியாக செல்லும் போது இடுப்பளவு தண்ணீரில் நீந்தித் தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் அமைத்து தர மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் ஒருவா் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன் பழையனூா்- வல்லாரேந்தல் வரையிலான சுமாா் 1 கி.மீ. வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அந்த சாலை பகுதிக்குள் வரும் கிருதுமால் நதியின் குறுக்கே கான்கிரீட் தரைப்பாலம் அமைக்க மட்டுமே அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கான்கிரீட் தரைப்பாலம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று விட்டன. எங்கள் துறை சாா்பில் நதியின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை என்றாா்.

இதுகுறித்து நபாா்டு திட்டத்தின் சிவகங்கை மாவட்ட அலுவலா் ஒருவா் கூறியதாவது: கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட கணக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு பெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com