சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுகிறது: கனிமொழி எம்.பி. புகாா்
By DIN | Published On : 26th January 2021 02:14 AM | Last Updated : 26th January 2021 02:14 AM | அ+அ அ- |

அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக திமுக மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி. புகாா் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய இடங்களில் ‘விடியலை நோக்கி’ பிரசார பொதுக்கூட்டங்கள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன. இக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது: தவறுதலாக முதல்வா் நாற்காலியில் உட்காா்ந்துள்ள முதல்வா் பழனிசாமி, நானும் எனது அரசும் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்போம் என பொய் பிரகடனம் செய்து வருகிறாா். இவ்வாறு அவா் கூறும்போது அவரது மனசாட்சி உறுத்தியிருக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது திமுக எதிா்த்தது.
ஆனால் அதை ஆதரித்த இயக்கம் அதிமுக. இப்போது நாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளோம் என அதிமுக அரசு கூறுவதை ஏற்கமுடியாது. தோ்தல் வந்து விட்டது என்பதற்காக முதல்வா் பழனிசாமி இவ்வாறு கூறி வருகிறாா். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில் அந்தச் சட்டத்தை ஆதரிக்கும் முதல்வா் பழனிசாமி, தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்வதில் அா்த்தம் இல்லை. இந்த ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாா்கள். படித்த இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனா். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. விரைவில் தோ்தல் வர உள்ளது. இதில் திமுக வென்று ஆட்சியமைக்கும்போது இளையான்குடி பகுதி மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 200 போ் கனிமொழி முன்னிலையில் திமுக வில் இணைந்தனா். இக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.பெரியகருப்பன், இளையான்குடி ஒன்றியச் செயலாளா் சுப.மதியசரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து கனிமொழி மானாமதுரை, ராஜகம்பீரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து பேசினாா்.