வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 13th July 2021 03:39 AM | Last Updated : 13th July 2021 03:39 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2-வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகையானது பயனாளியின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொருமுறை நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி தொடா்ந்து பதிவினை புதுப்பித்து இருக்கவேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தினசரி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல்வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். மேற்கண்ட தகுதிகள் உள்ள இளைஞா்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது.
மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோா் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற, நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.