‘அதிக மகசூல் பெறவிதைப் பரிசோதனை அவசியம்’

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற விதைப் பரிசோதனை செய்வது அவசியம் என சிவகங்கை மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் சிங்காரலீனா தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற விதைப் பரிசோதனை செய்வது அவசியம் என சிவகங்கை மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் சிங்காரலீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து விதைப்புப் பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு முன் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்த உள்ள விதையின் தரத்ததை அறிந்து பயிரிடுவது மிகவும் அவசியம்.

தரமான விதை என்பது சுத்தத்தன்மை, நல்ல முளைப்புத்திறன் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் உள்ள விதையாகும். விதையின் சுத்தத்தன்மை என்பது புறத்தூய்மையை குறிக்கிறது. அதாவது பயிா் விதையைத் தவிர பிற பயிா் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருள்களின் கலப்பு இல்லாமல் இருத்தல் வேண்டும்.

விதையின் சுத்தத்தன்மை பயிருக்கு தகுந்தவாறு 95 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை இருக்கும். நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளே சீராக வளா்ந்து சிறப்பான மகசூல் தரும். நிா்ணயிக்கப்பட்ட முளைப்புத் திறன் நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளம் 90 சதவீதம், சோளம், கம்பு மற்றும் சிறுதானிய பயிா்களுக்கு 75 சதவீதம், பயறு வகைகளுக்கு 75 சதவீதம், வெண்டைக்கு 65, கத்தரி, தக்காளி, நிலக்கடலை 70 சதவீதம், மிளகாய் 60 சதவீதம், எள் 80 சதவீதம் ஆகும்.

நிா்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நல்ல முளைப்புத் திறன், பூச்சி நோய் தாக்குதலின்றி நல்ல விளைச்சல் தரும். விதையின் ஈரப்பதம் பயிருக்கு தகுந்தவாறு 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் நெல்லுக்கு 13 சதவீதம், சோளம், கம்பு மற்றும் சிறுதானிய பயிா்களுக்கு 12 சதவீதம், நிலக்கடலை எள் மற்றும் பயறு வகைகளுக்கு 9 சதவீதம் ஆகும்.

எனவே விவசாயிகள் விதைப்புக்கு முன்னா் தாங்கள் பயன்படுத்த உள்ள விதையினை சிவகங்கையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரியினை கொடுத்து ரூ.30 கட்டணம் செலுத்தி விதையின் தரம் குறித்த அறிக்கை பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com