அரசு சேமிப்புக் கிடங்கில் லாரி ஓட்டுநா்கள் தா்னா
By DIN | Published On : 11th June 2021 07:37 AM | Last Updated : 11th June 2021 07:37 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள அரசு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங் கில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநா்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தமிழ் நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக்கிடங்கில் நெல்மூட்டைகளை இறக்கிட அனுமதி கோரி லாரி ஓட்டுநா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளத்தூா்- கல்லூா் செல்லும் சாலையில் உள்ள இந்த திறந்தவெளி சேமிப்புக்கிடங்கிற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இந்த சேமிப்புக்கிடங்கிற்கு சுமாா் 45 லாரிகளில் கொண்டு வரப்பட்டன. ஆனால் அங்கு இடப்பற்றாக்குறை உள்ளதாகக் கூறி இறக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 நாள்களாகியும் மூட்டைகளை இறக்கி வைப்பதற்குரிய தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும், உணவு, தண்ணீரின்றி அவதிப்பட்டு வருவதாகவும் கூறி அனைத்து லாரி ஓட்டுநா்களும் வியாழக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அரசு சேமிப்புக் கிடங்கு அதிகாரிகள் கூறியது: இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் மொத்தம் 30 ஆயிரம் டன் வரை சேமித்து வைத்துப் பாதுகாக்க முடியும். தற்போது பொதுமுடக்க காலமாக இருப்பதால் நெல் மூட்டைகளை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. காத்திருக்கும் லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளை ஓரிரு நாள்களில் இறக்கி வைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
இந்தத் தகவலையறிந்த லாரி ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.