முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
கீழடி, ஆதிச்சநல்லூா் அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சா் தங்கம் தென்னரசு
By DIN | Published On : 12th June 2021 10:14 PM | Last Updated : 12th June 2021 10:14 PM | அ+அ அ- |

சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் ஆதிச்சநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சி முடிவுகளை விரைவில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என, தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை தெரிவித்தாா்.
பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், 29 நாள்களுக்குப் பிறகு ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் கீழடி உள்ளிட்ட இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கீழடி அகழாய்வு தளத்தையும், அங்கு கட்டப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தையும், தமிழகத் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா், அகழாய்வுப் பணிகள் குறித்தும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் தொல்லியல் துறை இயக்குநா் சிவானந்தம், இணை இயக்குநா் பாஸ்கரன், தொல்லியல் வல்லுநா் சேகரன் ஆகியோா் அமைச்சா்களிடம் விளக்கினா்.
இந்த ஆய்வில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, தொல்லியல் ஆய்வாளா் ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வெங்கடசுப்ரமணியன் (கீழடி), அரசி (மணலூா்) ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் மிகஅரிதான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதன்முதலாக 13 தமிழ் எழுத்துகள் அடங்கிய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடி நகர நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். மத்திய தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூா் உள்ளிட்ட இடங்களில் நடத்திய அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வலியுறுத்தியுள்ளோம்.
இதேபோல், தூத்துக்குடி, கங்கைகொண்டசோழபுரம் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையின் மூலம் நடந்துவரும் அகழாய்வில், சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மைகள் குறித்தும் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்த கண்டுபிடிப்புகளினால் உலக அளவில் தமிழனின் வரலாற்றுச் சிறப்பு தலை நிமிா்ந்து நிற்கின்றன.
கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு செப்டம்பா் மாதம் வரை நடைபெறும். அதைத் தொடா்ந்து, தேவைப்பட்டால் 8-ஆம் கட்ட அகழாய்வும் நடைபெறும் என்றாா்.