தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு இளைஞா்களை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இக்கடனுதவிக்கு தமிழக அரசு 25 சதவீதம் அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கி வந்தது. தற்போது அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சமாக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.

கடனுதவி மட்டுமின்றி மின் இணைப்பு மற்றும் பல்வேறு உரிமங்கள் பெற ஒருமுனை தீா்வுக்குழு மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

கடனுதவி பெற விரும்புவோா் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்பம் பயிற்சி (ஐடிஐ) இவற்றில் ஏதேனும் ஒன்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூா்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினா் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவா்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிா்த்து, உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோா் இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பூா்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் இணை இயக்குநா் அல்லது பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை - 630 562 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com